உலகையே அதிரவைத்த செங்கிஸ்கான் அரசனை பற்றிய வியப்பூட்டும் வரலாறு..

" பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல.."

800 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வரிகளுக்கு பொருத்தமாக இருந்த பெயர் செங்கிஸ் கான். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா வரை படையெடுத்து சென்று பல இடங்களை சூறையாடியவர்.

பாம்பை கண்டால் மட்டுமல்லாது, செங்கிஸ் கான் வருகிறார் என்று கேட்டால் மற்ற அரசர்களின் படைகளும் நடுங்கும்.

காரணம் இவருடைய போர் முறைகள். இவருடைய வாழ்க்கையையே மர்மங்களின் கலவை என்று கூறுகிறார்கள்.

அதனால் பிறந்தது, வளர்ந்தது, மங்கோலியாவை நிறுவியது, ஆட்சிப்பகுதியை விரிவு படுத்தியது, கைப்பற்றிய பகுதிகள் போன்றவற்றை விட்டுவிட்டு சில சுவாரஸ்யமான மற்றும் அந்த மர்மமான கதைகளை மட்டும் எழுதுகிறேன்.

செங்கிஸ் கான் பற்றிய தகவல்கள்:

ஆசியாவின் மையத்தில் இருக்கும் மங்கோலியாவில் ஒரு நாடோடி இனக்குழுத் தலைவனின் மகனாகப் பிறந்து, மற்ற இனங்களையும் இணைத்து ஒரு வலிமையான படையை உருவாக்கி, வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகச் சந்தித்து வளர்ந்தவர்.
இவருக்கு சிறிய வயதில் நாய் மீது அதிக பயம் இருந்ததாம். மங்கோலிய நாய்கள் மனிதர்களை கொல்லும் அளவிற்கு மூர்க்க தனம் நிறைந்தவை என்று கூறுகிறார்கள்.
இவர் 9 வயதாக இருக்கும் போதே இவருடைய தந்தை இவருக்கு, இவரை விட ஒரு வயது மூத்த பெண்ணான போர்ட்டே என்பவருக்கு திருமணம் பேசினாராம்.
செங்கிஸ் கானிற்கு 500 மனைவிகள் என்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் என்றும் கூறுகிறார்கள். (இது மட்டும் அல்ல. இவரை பற்றி எல்லாமே, யார் யாரோ கிளப்பி விட்ட புரளிகளாக இருக்குமோ என்று எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது.)
ஆசியாவில் உள்ள 8% ஆண்கள் செங்கிஸ் கானின் வழித்தோன்றல்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறதாம்.
ஹிட்லரை விட பல மடங்கு மக்களை படுகொலை செய்திருக்கிறார். 40 மில்லியன் மக்கள் ( உலகின் 11% மக்கள்) இவருடைய ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
ஆச்சரியப்படும் விதமாக இவருக்கு மத சகிப்புத்தன்மை இருந்தது எனவும் எல்லா மதங்களின் மீதும் இவருக்கும் மதிப்பு எனவும் கூறப்படுகிறது.
பெண்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.( அதனால் தான் அத்தனை திருமணமா அல்லது இது புரளியா என தெரியவில்லை)
இவரிடம் தோற்ற அரசர்களை(உயிருடன் இருந்தால்) இவருடைய ராணுவத்தில் சேர்த்துக் கொண்டார்

பூமியின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்ததில் பிரிட்டிஷ் அரசுக்கு அடுத்ததாக செங்கிஸ் கான் தலைமையிலான மங்கோலிய பேரரசு இடம் பெற்றுள்ளது.

"என்னடா மர்மம் மர்மம் னு மேல இருக்கு. இன்னும் ஒன்னும் வரலையே" என்று நினைக்காதீர்கள். இதோ உள்ளது. அவருடைய இறப்பிற்கு பின் பகுதி தான்.

1227-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி செங்கிஸ் கான் இறந்தார். அப்போது அவருக்கு வயது 65 என்று சிலர் சொல்கிறார்கள். 72 வயதில் இறந்தார் என்றும் சொல்கிறார்கள்.

எந்த வயதில் இறந்தார் என்பது போலவே, அவர் எப்படி இறந்தார் என்பதும் மர்மம்.
சீனாவின் மேற்கு ஜியா பேரரசோடு போர் புரிந்து வெற்றி பெற்றபோது, போரில் ஏற்பட்ட காயத்தால், இன்சுவான் என்ற இடத்தில் தன் குதிரையிலிருந்து விழுந்து இறந்தார் என்கிறார்கள்.
'மங்கோலியர்களின் ரகசிய வரலாறு' எனும் பழைமையான நூல், வேட்டைக்குச் சென்றபோது ஏற்பட்ட காயத்தால் செங்கிஸ் கான் இறந்தார் என்கிறது.
வரலாற்றுப் புகழ்பெற்ற வெனிஸ் யாத்ரீகரான மார்க்கோ போலோ, 'கடைசிப் போரின்போது செங்கிஸ் கான் உடலில் துளைத்த அம்பு ஒன்றினால் ஏற்பட்ட காயம் ஆறவே இல்லை. அதில் நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் இறந்தார்' என எழுதியிருக்கிறார்.
'கடைசிப் போரில் மேற்கு ஜியா நாட்டின் இளவரசியை செங்கிஸ் கான் அபகரித்து வந்தார். ஓர் அந்தரங்கமான தருணத்தில் அவள் குறுவாளால் செங்கிஸ் கானைக் குத்திக்கொன்றாள்' என 17-ம் நூற்றாண்டு வரலாற்றுக் குறிப்பு ஒன்று சொல்கிறது.
மின்னல் தாக்கி இறந்ததாகவும் சொல்கிறார்கள்.
உயிரோடு இருந்தபோது பேரராசாக இருந்த செங்கிஸ் கான், இறந்த பிறகு தன் கல்லறை யார் கண்ணிலும்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இதற்காகத் தன் மகன்களிடமும் நெருக்கமான தளபதிகளிடமும் சத்தியம் வாங்கியிருந்தார்.

"என் கல்லறையில் என்னுடன் ஆறு பூனைகளை உயிரோடு புதையுங்கள். அவற்றின் குரல்கள், மரணத்துக்குப் பிறகான பயணத்தில் என்னை வழிநடத்தட்டும்" என்று கேட்டிருந்தார். பூனைகளை மட்டுமல்ல. செங்கிஸ் கான் வென்ற பொக்கிஷங்கள் பலவற்றையும் கல்லறையில் அவருடன் புதைக்க முடிவெடுத்தார்கள். அந்தக் கல்லறையை படு ரகசியமாக வைத்திருக்கவும் முடிவெடுத்தார்கள்.


அவரின் இறுதி ஊர்வலம் ஒரு படுபயங்கர பயணமாக தொடங்கியது. செங்கிஸ் கானின் சடலத்தை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு ஆயிரம் வீரர்களும் ஏராளமான அடிமைகளும் கிளம்பினார்கள்.

மற்ற பகுதிகளில் கொடூரமானவராக இருந்தாலும் அவருடைய நாட்டு மக்களுக்கு நல்லவராக இருந்திருப்பார் போலும். அந்நாட்டு மக்கள் 'நம் பேரரசரின் சடலத்தைப் புதைப்பதற்காக எடுத்துச் செல்கிறார்கள்' என்று ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க வந்தார்கள். பாவம் அவர்களுக்கு தங்கள் விதி என்ன ஆகும் என்பது முன்பே தெரிந்திருக்கவில்லை.

'இந்த வழியாகத்தான் செங்கிஸ் கானின் சடலத்தை எடுத்துப் போனார்கள்' என்று சொல்வதற்குக்கூட ஆள் இருக்கக் கூடாது என முடிவெடுத்து ஊர்வலத்தை பார்த்த அத்தனை பேரையும் கொன்று விட்டனர்.

தற்செயலாக அந்தப் பாதையில் எதிர்ப்பட்டவர்களுக்கும் இதே நிலை தான். மங்கோலியாவில் மக்கள் நெருக்கம் மிகக் குறைவு. ஓர் ஊரைத் தாண்டினால் அடுத்த கிராமம் மிக நீண்ட பயணத்துக்குப் பிறகே வரும். அதனால், சில நூறு பேரை மட்டுமே கொன்றுவிட்டு, செங்கிஸ் கானின் பயணம் தனது இலக்கை அடைந்தது.

கல்லறைக்கான பள்ளத்தை அடிமைகள் தோண்டி முடித்தனர். பேரரசரின் அடக்கம் முடிந்ததும், அத்தனை அடிமைகளும் கொல்லப்பட்டார்கள். பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட அந்தக் கல்லறையை ரகசியமாக்கிவிட்டு, புதிதாக மண்ணைத் தோண்டிய தடயம் தெரியக் கூடாது என்பதற்காக அந்த இடத்தில் ஆயிரம் குதிரைகளை ஓடவிட்டு, எல்லா இடங்களையும் ஒரே மாதிரி சமப்படுத்தினார்கள் என்று கூறப்படுகிறது.

அதன் பின்னர் ஆயிரம் வீரர்களும் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர் என மங்கோலிய வரலாறு கூறுகிறது.

ஓடிக்கொண்டிருந்த ஒரு நதியைச் சில மணி நேரங்கள் வேறு திசையில் திருப்பிவிட்டு, அந்த நதியின் பழைய பாதையில் கல்லறையை அமைத்து முடித்து, நதியை பழையபடி தன் பாதையில் ஓடவிட்டார்கள் என்று ஒரு தகவல் கூறுகிறது.

கல்லறை:

2,000 ஆண்டுகளுக்கு முன்னர் மங்கோலியாவின் ஜியாங்கு மன்னர்களுக்கு அமைக்கப்பட்ட கல்லறைகள் விநோதமானவை. தரைக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில் ஒரு குட்டி அரண்மனைபோல கல்லறையை அமைப்பார்கள். நடுவில் மன்னரின் உடல் வைக்கப்படும். அவர் அணிந்திருந்த நகைகள், பயன்படுத்திய பொருள்கள், பயணித்த தேர் என அனைத்தையும் அந்தக் கல்லறையில் வைத்து மூடிவிட்டு, அந்தக் கல்லறை அமைந்த இடத்தில் தரைக்கு மேலே சதுரக் கற்களை அடையாளத்திற்காக வரிசையாக நட்டு வைப்பார்கள்.

செங்கிஸ் கான் கல்லறையில் இந்த நடைமுறைகளை எல்லாம் செய்துவிட்டு, தரைக்கு வெளியில் சதுரக் கற்களை மட்டும் வைக்கவில்லை. அதனால்தான், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஜியாங்கு மன்னர்களின் கல்லறைகள் எல்லாம் கிடைத்துள்ளன. அதன் பிறகு ஆட்சி செய்த செங்கிஸ் கானின் கல்லறை கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்..


தேடல்:

அமெரிக்க தங்க வியாபாரியான மௌரி கிராவிட்ஸ், 40 ஆண்டுகளாக செங்கிஸ் கானின் கல்லறையைத் தேடும் முயற்சியில் இருந்தார். "ஒவ்வொரு நாட்டையும் வென்ற பிறகு, அங்கிருந்து பெரிய மாட்டு வண்டிகளில் தங்கதந்தையும் விலையுயர்ந்த கல் நகைகளையும் சூறையாடி வருவது செங்கிஸ் கானின் வழக்கம். அவர் வைத்திருந்த வாளின் கைப்பிடிகூட தங்கத்தால் ஆனது. இப்படி ஏராளமான ஆயுதங்கள் செங்கிஸ் கானின் அரண்மனையில் இருந்தன. பல நாடுகளிலிருந்து வண்டி வண்டி யாகக் கொண்டுவந்த எந்தப் பொக்கிஷமும் இப்போது மங்கோலியாவில் இல்லை. இங்கிருந்து வெளியில் போகவும் இல்லை. அப்படியானால், அவை அந்தக் கல்லறையில் தான் புதைக்கபட்டிருக்கும்" என்கிறார்.
அவர் ஓக்லோக்சின் கெரெம் என்ற இடத்தில் தேடினார். அப்போது அவருக்கு விநோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தேடுதல் குழுவில் இருந்தவர்கள் சிலர், திடீரென பாம்பு கடித்து இறந்து போனார்கள். மலைப்பாதைகளில் சில வாகனங்கள் தானாகவே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின. மங்கோலிய எதிர்க்கட்சிகள் இந்தக் குழுவின் தேடலுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், அரசு இவர்களை வெளியேறச் சொல்லிவிட்டது.

செங்கிஸ் கானின் கல்லறையை இரண்டு மைல் நீளமுள்ள ஒரு சுவர் பாதுகாக்கிறது என்றும் இந்தச் சுவர் கற்களால் கட்டப்படவில்லை, முழுக்க முழுக்க பாம்புகள் பிணைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை நெருங்கும் யாரையும் இந்தப் பாம்புகள் உயிரோடு விட்டு வைக்காது எனவும் அப்போது ஒரு புரளி பரவியது.

இந்தப் பொக்கிஷங்களுக்காகப் புதையல் வேட்டைக்காரர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் பல இடங்களில் தேடினர். நீண்ட மணல் பரப்புகளும், நிறைய மலைகளுமாக இருக்கும் மங்கோலியாவில் இந்தக் கல்லறையைத் தேடுவது என்பது, வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவது போன்றது என்று சிலர் கூறினர்.

செங்கிஸ் கானின் கல்லறை, கென்டி மலைப் பகுதியில் இருப்பதாகவும் ஒரு புரளி உள்ளது. இளம் வயதில் போரில் தோற்று தலைமறைவாக இருந்தபோது செங்கிஸ் கான், "என் இறுதிக்காலத்தில் இங்கு தான் வருவேன்" என்று சொல்லியிருந்தாராம். அதனால், இந்த பகுதியிலும் ஒரு கும்பல் தேடி வருகிறது.

செங்கிஸ் கான் பிறந்த இடம், புர்கா கால்டுன் மலைப் பகுதி. இங்கு ஓனோன் நதி ஓடுகிறது. அங்கு 'இக் கோரிக்'(மங்கோலிய மொழியில் இதற்கு ‘பேசக் கூடாத பெரிய இடம்’ என அர்த்தம்) ஒரு இடம் உள்ளது. அந்த நதிக்கு அடியில் கல்லறை உள்ளது என்றும் இதைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதால்தான் இந்த இடத்துக்கு இந்தப் பெயர் வந்தது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

ஜப்பானிய தொல்பொருள் நிபுணர்களும் மங்கோலிய தொல்பொருள் துறையும் இணைந்து இங்கு அகழ்வாராய்ச்சி நடத்தி, கடந்த 2004-ம் ஆண்டு செங்கிஸ் கானின் அரண்மனையைக் கண்டறிந்தார்கள். அரண்மனை இங்கே இருக்கிறது என்றால், பக்கத்தில் தான் கல்லறை இருக்கும் என்று தேடினார்கள்.

ஆனால், மங்கோலியாவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த முயற்சி நிறுத்தப்பட்டது. ஆனாலும் ரகசியத் தேடலில் ஒரு பெரிய கும்பல் இறங்கியுள்ளது.

இப்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆல்பர்ட் லின் யு-மின் என்பவர், செயற்கைக்கோள் படங்கள், தரையைத் துளைத்துப் பார்க்கும் ரேடார் பதிவுகள் ஆகியற்றின் மூலம் இந்தக் கல்லறையைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மங்கோலிய மக்கள், மரணம் குறித்துப் பேசுவதைப் பாவச் செயலாகவே கருதுகிறார்கள். இறந்தவர்களைப் புதைத்த இடத்தைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது அவர்களின் நம்பிக்கை. அதிலும் செங்கிஸ் கானை, தங்கள் இனத்தின் வீரத்தை உலகத்துக்கு உணர்த்திய தலைவராக அவரைப் பார்க்கிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் செங்கிஸ் கானின் ஓவியத்தை வைத்து வழிபடுகிறார்கள். சாக்லேட் முதல் ரூபாய் நோட்டு வரை எல்லாவற்றிலும் செங்கிஸ் கானின் உருவம் இருக்கும். மங்கோலிய மக்கள் எல்லோருமே தங்களை செங்கிஸ் கானின் குழந்தைகளாக நினைக்கிறார்கள்.

‘செங்கிஸ் கானின் கல்லறையை யாராவது கண்டுபிடித்துத் திறந்துவிட்டால், அதுவே இந்த உலகத்தின் கடைசி நாள்’ எனவும் நம்புகிறார்கள். கடந்த 1941-ம் ஆண்டு மங்கோலிய அரசர் டாமர்லேன் என்பவரின் கல்லறையை சோவியத் ரஷ்யாவின் தொல்பொருள் ஆய்வாளர்கள் திறந்தபோது, இரண்டாம் உலகப் போர் மூண்டது. நாஜி படைகளின் தாக்குதலால் ரஷ்யா பெரும் சேதத்தைச் சந்தித்தது என்பதை முன்னுதாரணமாகச் சொல்கிறார்கள்.

மிருகத்தனமான தாக்குதல்கள் நடத்தி பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்த மன்னனாக வரலாறு அவரை உலகிற்கு அடையாளப்படுத்துகிறது. ஆனால் இந்த வரலாற்றை வேறுவிதமாக பார்ப்பவர்களும் உண்டு.

" அலெக்ஸாண்டரையும், சீஸரையும், நெப்போலியனையும் மாவீரர்களாக மேற்கத்திய உலகம் கூறுகிறது. அவர்களும் போர்களில் கொல்லத் தான் செய்தார்கள். உலகையே ஆள நினைத்தார்கள். அவர்களை விட அதிக நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் செங்கிஸ் கான். ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்து, முதன்முதலில் இந்த உலகை ஒருங்கிணைத்தவர் அவர். இரண்டு கண்டங்களுக்கும் வணிகமும் பண்பாட்டுப் பரிமாற்றமும் இவரால் தான் நிகழ்ந்தது. மதச் சுதந்திரம் மக்களுக்குக் கிடைத்தது. நிலப்பிரபுகளின் அதிகாரத்தை ஒழித்தார். சீனாவிலிருந்து காகிதம் ஐரோப்பாவுக்குப் போவது அவரால் தான் சாத்தியமானது. காகித கரன்சி, தபால் முறையை எல்லாம் அறிமுகம் செய்தார். அவர் உலகை நாகரிகப்படுத்தியவர்" என்கிறார்கள் மங்கோலியர்கள்.

அதனால் தான் உலகமே செங்கிஸ் கானின் கல்லறையைத் தேடினாலும், அதைத் தொந்தரவு செய்யாமல் பாதுகாக்க வேண்டும் என மங்கோலிய மக்கள் நினைக்கிறார்கள்

Post a Comment

Previous Post Next Post