அடிக்கடி இல்லுமினாட்டி இல்லுமினாட்டி என்று சொல்கிறார்களே தவிர “அப்படினா என்ன?” என்று கேட்டால் ஒருவரும் பதில் சொல்வது இல்லை. அதனால் நானே படித்து தெரிந்து கொண்டேன்.
முதலில் இல்லுமினாட்டி என்ற பெயரின் பொருள் என்ன?
Illuminate என்ற ஆங்கில வார்த்தைக்கு வெளிச்சமாக்குதல் என்று பொருள். இந்த வார்த்தையிலிருந்து உருவானது தான் இல்லுமினாட்டி என்ற வார்த்தை.
யார் தான் இந்த இல்லுமினாட்டி?
18ஆம் நூற்றாண்டு, இங்கோல்ஸ்டாட் என்ற ஜெர்மனி நாட்டு நகரத்திலிருந்து இல்லுமினாட்டியின் கதை துவங்குகிறது.
கதைக்குள் செல்லும் முன்:
18ஆம் நூற்றாண்டில் அரசு, மக்கள் வாழும் விதம் மற்றும் பெரிய பொறுப்புகள் தேவாலயத்தில் உள்ளவர்கள் பொறுப்பில் இருந்தது. அப்போது மக்களின் மூட நம்பிக்கைகள் அதிகமாக இருந்த காலமும் கூட. மக்களின் மூட நம்பிக்கைகளை நீக்கவும் தேவாலயத்தை எதிர்த்தும் பல குழுக்கள் கிளம்பின. இந்த காலத்தை age of enlightenment என்று கூறினர்.
இப்போது கதைக்கு வருவோம்:
- 1773ஆம் ஆண்டு
- ஜெர்மனி நாடு
- பவேரியா மாநிலம்
- இங்கோல்ஸ்டாட் நகரம்
- இங்கோல்ஸ்டாட் பல்கலைக்கழகம்
மேற்கூறிய பல்கலைக்கழகத்தில் ஆதாம் வெய்ஷாப்ட் (Adam Weishaupt) என்பவர் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவர் சட்டம் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களுக்கு விரிவுரையாளராக இருந்தார்.
(இவர் தான் அந்த ஆதாம் வெய்ஷாப்ட். படம் கூகுளில் இருந்து எடுக்கப்பட்டது)
இந்த பல்கலைக்கழகமும் தேவாலயத்துடன் தொடர்புடையவர்கள் பொறுப்பில் தான் இருந்தது. ஆதாம் வெய்ஷாப்ட் தத்துவ விரிவுரையாளர் ஆவதற்கு முன் பல வருடங்களாக அந்த பதவியை பாதிரியார்கள் தான் வகித்தனர். தேவாலய தத்துவத்தை ஏற்காத ஆதாம் விரிவுரையாளர் ஆனது அவர்களுக்கு பிடிக்காமல் போகவே அவரை பல்கலைக்கழகத்தில் உள்ள பலர் எதிர்த்தனர்.
தன்னை போன்ற கருத்துடையவர்களால் தான் தன் தத்துவங்களை புரிந்து கொள்ள முடியும் என்று நினைத்த ஆதாம், அப்போது ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த ஃப்ரீமேசன் (freemason) என்ற இரகசிய சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்பினார். ஆனால் அவரிடம் அந்த சங்கத்தில் சேர தேவையான நுழைவுக் கட்டணத் தொகை இல்லை. எனவே தானே ஒரு இரகசிய சங்கத்தை உருவாக்க தீர்மானித்தார்.
இல்லுமினாட்டி சரித்திர ஆரம்பம்….
மே 1, 1776 அன்று ஆதாம் தன்னுடைய நான்கு மாணவர்களுடன் சேர்ந்து தனது இரகசிய சங்கத்தை உருவாக்கினார். இதற்கு Bund der Perfektibilisten, அதாவது பரிபூரணவாதிகளின் கூட்டமைப்பு என்று பெயர் வைத்தார். ஏப்ரல் 1778இல் Illuminatenorden, இல்லுமினாட்டிகளின் அமைப்பு என்று பெயர் மாற்றம் செய்தார். இந்த அமைப்பு ஆதாம் சேர நினைத்த ப்ரீமேசன் அமைப்பை தழுவி அமைக்கப்படது.
(புத்தகத்தின் மேல் ஆந்தை உட்கார்ந்திருக்கும் ஓவியம் தான் அப்போது இல்லுமினாட்டியின் அடையாளமாக இருந்தது. படவுதவி: கூகுள்)
சில வருடங்களில், ப்ரீமேசன் அமைப்பிலிருந்தும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்தும் ஆட்கள் சேர்க்கப்பட்டனர். பவேரியா மாநிலத்தின் பல முக்கிய புள்ளிகள் உறுப்பினராக சேர்ந்தனர். இல்லுமினாட்டி மிகவும் பிரபலமடையவே இரகசியமாக இருப்பது கடினமானது. இல்லுமினாட்டிகள் நாட்டின் பல முக்கிய பொறுப்புகளை வகிக்க ஆரம்பித்தனர். இதை அறிந்து பவேரியாவின் பிரபுவாக (Duke) இருந்த சார்லஸ் தியோடர் (Charles Theodore) இரகசிய அமைப்புகள் அனைத்திற்கும் 1785ஆம் ஆண்டு தடை விதித்தார். ஆதாம் தலைமறைவானார்.
சரி அது தான் அப்போதே முடிந்து விட்டதே இப்போதும் ஏன் பேசப்படுகிறது?
தடை விதிக்கப்பட்டு கலைக்கப்பட்ட பின்னும் இல்லுமினாட்டி தொடர்ந்து இயங்குவதாகவும், உலகையே கட்டுப்படுத்த போவதாகவும் 1797 மற்றும் 1798 ஆண்டுகளில் ஆகஸ்ட்டின் என்பவரும் ஜான் என்பவரும் தனித்தனியே இரு புத்தகங்கள் வெளியிட்டனர்.
(ஆகஸ்ட்டின் வெளியிட்ட புத்தகத்தின் ஆங்கில பதிப்பு 1799 ஆண்டு வெளியானது)
அப்போதிலிருந்து ஆரம்பித்து இல்லுமினாட்டி இருப்பதற்கான ஆதாரங்களாக சிலவற்றை வைத்து இன்றுள்ள டான் பிரௌன் (Dan brown) வரை பல எழுத்தாளர்கள் இல்லுமினாட்டிகளை வைத்து புத்தகங்கள் எழுதி வருகின்றனர். சில படங்கள், விளையாட்டுகள் ஆகியவையும் இல்லுமினாட்டியை தழுவி அமைக்கப்பட்டன.
ஆனால் இந்த இல்லுமினாட்டிகள் உண்மையில் இன்றும் இருக்கின்றார்களா?
அது யாருக்கும் 100% உறுதியுடன் தெரியாது (இரகசிய அமைப்பு என்பதாலோ?). பல அமைப்புகள் தாங்கள் இல்லுமினாட்டிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறுகின்றனர். சிலரோ இவையெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று கூறுகின்றனர்.
இல்லுமினாட்டிகள் இருப்பதாக கூறுபவர்கள் ஊடகங்கள், வர்த்தகம், உலகளாவிய அரசியல் ஆகிய அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறுகின்றனர். அமெரிக்காவிலிருந்து தமிழகம் வரை உள்ள பல முக்கிய புள்ளிகள் இல்லுமினாட்டி உறுப்பினர்கள் என்று பெயர் அடிபடுகிறது. இல்லுமினாட்டி இருப்பதற்கான ஆதாரம் என்று யூடியூப்பில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களும் உள்ளன.
இப்போது இருக்கும் இல்லுமினாட்டிகள் மொத்த உலகத்திற்கும் ஒரே அரசு ஒரே மதம் கொண்டு வர நினைக்கின்றனர் என்றும் கூறுகிறார்கள்.
இவற்றில் எவ்வளவு உண்மை எவ்வளவு கற்பனை என்பது கூறுபவர்களுக்கே வெளிச்சம்
Post a Comment