இதுவரை யாருக்கும் தெரியாத செய்தி..

இது இதுவரை யாருக்கும் தெரியாத செய்தி என்று கண்டிப்பாக கூறமுடியாது.ஆனால் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு சற்று குறைவு.
இந்த உலகில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான கிறிஸ்தவம், இஸ்லாம்,இந்து மற்றும் புத்தமதம் போல அரை நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்காவில் தோன்றி சில இடங்களில் அதிகாரப்பூர்வமாகவும் சில இடங்களில் மறைமுகமாகவும் இயங்கி வருகிறது (இந்தியா உட்பட).Church of Satan என்ற இம்மதமானது அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதமாகும்.தற்போது இந்த மதத்தில் பல இளைஞர்கள் இணைந்து வருகிறார்கள்.
இவர்கள் எதிர்மறை கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். சாத்தானை முக்கிய கடவுளாகவும், லூசிஃபர்-ஐ கடவுளின் மகனாகவும் தங்களை மீட்கவந்த இளவரசராகவும் போற்றுகின்றனர் (அதாவது கிறிஸ்தவ மதத்தில் உள்ள இயேசுவைப்போல). இவர்களைப் பொறுத்தவரை பைபிளில் வரும் கடவுளே தீயசக்தி ஆகும். இவர்கள் எதிர்மறை ஆற்றலை வழிபடுகிறவர்கள். பில்லி, சூனியம் மற்றும் ஏவல் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள்.டார்வீனிய தத்துவங்களை முழுமனதோடு ஏற்றுக் கொண்டவர்கள். இவர்களுடைய கொள்கைகள் அனைத்தும் கத்தோலிக்க திருச்சபைக்கு நேரெதிரானவை. இவர்களின் ஆலயம் (Satanic Church) கத்தோலிக்க தேவாலங்களை ஒத்திருக்கும். இவர்களின் புனித சின்னம் தலைகீழ் சிலுவையாகும்.
தோற்றம் மற்றும் வளர்ச்சி:
சாத்தானிய சபையானது 1966 ஏப்ரல் 13-ல் ஆண்டன் சான்டர் லாவே (Anton Szandor LaVey) என்பவரால் கலிபோர்னியாவில் உள்ள சான்ஃப்ரான்சிஸ்கோ நகரத்தில் Black House (இந்த வீடு முழுவது கருப்புநிறப் பூச்சு பூசப்பட்டது) என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. இந்தநாள்தான் சாத்தானிய நாள்காட்டியின் தொடக்கமாகும் (1 AS). இதில் AS என்பது Anno Satanas (சாத்தானின் காலம்) என்பதன் சுருக்கமாகும். அதாவது நாம் தற்போது பயன்படுத்தும் கிரிகோரியன் நாட்காட்டியில் BC மற்றும் AD எனக் குறிப்பிடுவதுபோல இவர்கள் AS எனக் குறிப்பிடுகிறார்கள்.தற்போது AD மற்றும் BC என்பன முறையே CE (Common Era) மற்றும் BCE (Before Common Era) என மாற்றம் செய்யப்பட்டு அனைத்து ஊடகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
படம் :ஆண்டன் சான்டர் லாவே
படம் :Black House
சாத்தானிய சபையின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஃப்ரெட்ரிக் நீட்சே (ஜெர்மனி) மற்றும் ஐன் ரண்டா (ரஷ்யா) ஆகியோரின் தத்துவங்கள் அதிகமாக எடுத்து பயன்படுத்தப்பட்டன. லாவே-யை தலைவனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சபையானது க்ரோட்டோஸ் (Grottos) என்ற அமைப்பாக அமைக்கப்பட்டு அமெரிக்காவின் பல ப்ராந்தியங்களில் தோற்றுவிக்கப்பட்டது. பல இளைஞர்கள் ஆர்வத்துடன் இச்சபையில் வந்து இணைந்தனர்.மேலும் லாவேயின் சபையிலிருந்து பிரிந்து சிலர் தனியாக சாத்தானிய சபைகள் ஆரம்பிக்கத் தொடங்கினர் (உதாரணமாக: Temple of Set -1975).இதனால் அதிர்ச்சியடைந்த லாவே க்ரோட்டோக்களை 1975-ல் ஒழித்தார்.பின்னர் சந்தர்ப சூழ்நிலைகளால் மீண்டும் செயல்படுத்தினார். பிற்காலங்களில் ஆண்டன் லாவேயின் மகளான கார்லா லாவே 1997-ல் First Satanic Church என்ற சபையை நிறுவி அச்சபைக்கு தலைமை பாதிரியாராக பதவி வகித்து வருகிறார்.
புனித நூல்:
சாத்தானிய சபையின் புனிதநூல் The Satanic Bible ஆகும்.சாத்தானிய சபையை நிறுவிய ஆண்டன் லாவேயால் எழுதப்பட்டு 1969-ல் வெளியிடப்பட்டது. இந்நூலில் மற்ற மதநூல்களைப்போல கடவுள்கள் மற்றும் இறைதூதர்களின் குறிப்புகள் கிடையாது. மாறாக தத்துவங்களும், மதக்கோட்பாடுகளும் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.மொத்தம் 272 பக்கங்கள் கொண்ட இந்நூலின் மூன்றாம் பதிப்பானது மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்துள்ளதாம். மேலும் டானிஷ், ஸ்வீடிஷ், ஜெர்மன், ஸ்பானிஷ், ஃபின்னிஷ் மற்றும் துருக்கிய மொழியிலும் இந்நூலானது மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
இப்புத்தகத்தை நிகழ்நிலையில் வாங்க : Buy Satanic Bible by LaVey Anton Szandor at Low Price in India .
இச்சபையில் உள்ள சடங்குகள்,சட்டங்கள், விழாக்கள் என அனைத்தும் மற்ற மதங்களை விட வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் இருக்கவேண்டுமென விரும்புகிறார்கள். மேலும்,
  • இச்சபையின் முக்கியமான புனித நாளே அவரவருடைய பிறந்த நாள்தான். மேலும் அமாவாசை, பௌர்ணமி,இரவும் பகலும் சமமாக வரும் நாட்கள், சூரிய மற்றும் சந்திர கிரகணம் ஆகியவை இவர்களின் முக்கிய பொது விழாக்களாகும்.
  • சடங்குகளின்போது மேடையில் ஒரு பெண் தென்திசையில் தலைவைத்து நிர்வாணமாக படுத்திருப்பார் (Alter of Flesh). அனைவரும் கருப்புநிற உடையும், சித்தானிய ஆடு அல்லது ஐந்துமுக நட்சத்திரம் பொறிக்கப்பட்ட அணிகலனை அணிந்திருப்பர் (படம் - 3 கீழே).
  • இம்மதத்தில் பயன்படுத்தப்படும் மந்திரங்கள் அனைத்தும் பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும்.
  • முதலில் சாத்தானிய பைபிளை வைத்தே குழந்தைகளுக்கு போதனை செய்யப்பட்டாலும் 2014-லிருந்து குழந்தைகளுக்கு விளக்கப் படங்களுடன் கூடிய வண்ண நூல்கள் வழங்கப படுகின்றன. இதில் சாத்தானிய கோட்பாடுகள், இரக்கம்,மனித நேயம், சுயவிருப்பம் மற்றும் நட்பு போன்ற பல நல்ல கருத்துக்களும் இடம் பெற்றிருக்கும்.
  • இச்சபையில் உள்ள உறுப்பினர்கள் பெருமபாலானோர் நாத்திகவாதிகளும், மனிதநேய தத்துவங்களை கொண்டவர்களே. சாத்தானை இவர்கள் ஒரு உருவமாக பார்ப்பதில்லை.மாறாக இக்கோட்பாட்டையே இவர்கள் வழிகாட்டியாக பாவிக்கிறார்கள்.
  • இயற்கையாகத் தோன்றும் எவையுமே பாவமில்லை என்பது இவர்களுடைய கருத்து. எனவே இவர்கள் யாருக்காகவும் பயந்து குற்ற உணர்வோடு அலைவதில்லை‌.
  • இச்சபையில் இருப்பவர்கள் மீது நரபலி கொடுத்தல், கொலை, போதைப்பொருள் கடத்தல் என பல குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் இச்சபையில் இருக்கும் சிலர் மற்றுமே இதை செய்கிறார்கள் என்பதால் காவல் துறையால் எதுவும் செய்ய முடியவில்லை.
  • சாத்தானிய சபையின் உறுப்பினர் அடையாள அட்டையை பெற நீங்கள் $225 கட்ட வேண்டும் (படம்-1 கீழே).பெற்றோர்கள் சாத்தானிய சபையில் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய குழந்தைகளும் இச்சபையில் இணைய வேண்டிய கட்டாயம் இல்லை.அவர்கள் எந்த மதத்தில் இணைய வேண்டும் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் (சாத்தானிய சபையின் உறுப்பினர் விண்ணப்பப் படிவம் :Registered Membership in the Church of Satan | Church of Satan).
  • சாத்தானிய சபையிலும் திருமுழுக்கு (ஞானஸ்நானம்), திருமணம் மற்றும் இறப்பு சடங்குகள் உள்ளன.இவைகள் குருக்கள் மூலமே நிறைவேற்றப்படும்.
  • கத்தோலிக்க மதத்தைப் போலவே இவர்களும் திருப்பலியைக் (Holy Mass) கொண்டாடுகிறார்கள்.அதில் நற்கருணை சடங்குக்குப் பிறகு கலவி சடங்கு நடைபெறும் (படம் -2 கீழே).
  • சாத்தானிய சபையில் உறுப்பினராக இருப்பவர்கள் தங்களை சாத்தானிய சபையினர் என வெளிப்படையாக காட்டிக் கொள்வது இல்லை. இவர்கள் சடங்குகள் செய்யும்போது கூட முகமூடி அணிந்துகொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத காடுகளில்தான் நடத்துவார்கள்.
  • கிறிஸ்தவ மதத்தில் 10 கட்டளைகள் உள்ளதுபோல இவர்களுக்கும் 11 கட்டளைகள் உள்ளன.
11 சாத்தானிய சட்டங்கள்:
  1. உன்னிடம் ஒருவன் தானக முன்வந்து கேட்கும் வரை அவனுக்கு கருத்தோ அறிவுரையோ கூறாதே‌.
  2. ஒருவர் கேட்க விரும்புகிறார் என உறுதியாகத் தெரியாமல் உன்னுடைய பிரச்சனைகளை அவர்களிடம் சொல்லாதே‌.
  3. அடுத்தவரின் வீட்டிற்கு சென்றால் அவர்களுக்கு மரியாதை கொடு. இல்லையெனில் அங்கே போகாதே.
  4. உன் வீட்டிற்கு வந்த விருந்தாளி உன்னை வெறுப்பேற்றினால் அவரை கொடூரமாக நடத்து இரக்கம் காட்டாதே.
  5. ஒருவருடன் காமத்தோடு பழகாதே, அவரிடம் இருந்து அழைப்பு வரும்வரை.
  6. ஒரு பொருள் மற்றவர்களுடைய உடைமையாய் இருந்து அதை அவர்கள் வேண்டாமென்று வெறுத்து உன்னை எடுத்துக்கொள்ளுமாறு கூறும்வரை உனக்கு உரிமையில்லாத பொருள்மீது ஆசைப்படாதே.
  7. பில்லி,சூனியம் போன்ற மந்திரங்களை பயன்படுத்தி உனது ஆசைகளை நீ அடைந்திருப்பாயாயின் அதன் சக்தியை ஒத்துக்கொள். அவ்வாறு நீ ஒத்துக் கொள்ளவில்லை எனில் அடைந்த அனைத்தையும் இழப்பாய்.
  8. உனக்கு தொடர்பில்லாத எதன்மீதும் குற்றம் சுமத்தாதே.
  9. சிறு குழந்தைகளை துன்புறுத்தாதே.
  10. உணவு மற்றும் தற்காப்பு போன்ற காரணங்களைத் தவிர்த்து எதற்காகவும் விலங்குகளைக் கொல்லாதே.
  11. பொது இடங்களில் யாரையும் தொந்தரவு செய்யாதே.யாராவது தொந்தரவு செய்தால் அவரிடம் சொல்லிப்பார்.கேட்கவில்லையெனில் அழித்துவிடு.
தற்போது சாத்தானிய சபையின் நிலை:
தற்போது சாத்தானிய சபையின் தலைமைப் பாதிரியாராக Peter H. Gilmore (படம் கீழே)என்பவர் பதவி வகித்து வருகிறார் (2001-லிருந்து).சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலும் இந்த சபை ஆரம்பிக்கப் பட்டதாகவும் பின்னர் மத ரீதியாக ஏற்பட்ட சிக்கலால் லூசிபர் பவுண்டேஷன் என்று பெயரை மாற்றிக்கொண்டு மறைமுகமாக உறுப்பினர்களை இணைத்து வருவதாக கேள்விப்பட்டேன்.
நன்றி : 
அ.அன்பரசன்

Post a Comment

Previous Post Next Post